ஓம்
A short story, in Tamil, on Religious Harmony and against religious conversions... (about 4 pages long!)
If you like it, please share it. Thanks!
பட்டாம்பூச்சி ஞானபூர்ணம்
இந்தியாவில் ஒரு சிற்றூரில் 'சாமி ஞானபூர்ணம்' என்னும் பெயர்கொண்ட ஒரு துறவி குடி புகுந்தார். அவர் புகழ்பெற்ற மகான் ஒருவரின் சிஷ்யர். அவர் அந்த ஊரில் பெரும்பான்மையாக வாழும் இந்து மக்களை அணுகி நட்பு செய்து கொண்டார். அவர் அவ்வப்போது இந்து சமய வழக்கங்களைப் பேசி வந்தார், அத்துடன் சில முரண்பட்ட கருத்துக்களையும் கூறி வந்தார். துறவிக்குத் தரும் மரியாதையின் பேரில் யாரும் மறுத்துப் பேசவில்லை.
ஒருநாள், அவ்வூரில் மத மாற்றத்தை தடுப்பது எப்படி? குறிப்பாக வறுமையில் வாடும், படிப்பறிவு இல்லாத இந்து ஜனங்களைக் குறிவைத்து மாற்ற முயற்சிக்கும் மற்ற மதச் சார்பு குழுக்களை எப்படி சமாளிப்பது, என்று ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிலர் சீரிய, அரிய கருத்துக்களை முன் வைத்தனர்.
அங்கு பேசிய ஒரு கல்லூரிப் பேராசிரியர்,
"ஒருவனுக்கு தீர்க்க முடியாத பிரச்சனை என்று வரும் போது, அவன் மேரி மாதா, மாரியம்மா என்று வேறுபாடு காணாமல், எங்கு தன் குறை தீருமோ அங்கு செல்கிறான்", என்றும், இந்து வேதத்தில் உள்ளதை, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் கூறியபடி, "அண்ட பகிரண்டம் முழுவதிலும், எல்லா இடத்திலும் ஒரே கடவுள் தான் உள்ளார், அவரே பல ரூபங்களில் தோன்றுகிறார்." என்ற கருத்தையும் முன் வைத்தார்.
இன்னொரு பெரியவர்,
"இப்படி 'ஒரே கடவுள்' என்னும் நோக்கினை இந்துமதத்தினர் மட்டுமே ஏற்றுக்கொள்வர். ஒரு கிறிஸ்தவனோ அல்லது முஸ்லீமோ இந்த நோக்கத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் கடவுள், அவர்களின் தேவதூதன், அவர்களின் வேதம் தான் உண்மை. மற்றவையெல்லாம் பொய் என்றே கூறுவர்" என்னும் ஒரு நிதர்சன உண்மையை முன் வைத்தார்.
மேலும், "மற்ற மதப் பிரசாரகர்கள் ஒரு வியாபார அணுகுமுறையில் தனது 'மார்கெட்டை' எப்படி விருத்தி செய்ய முனைகிறார்களோ அப்படி நம் கீழ்த் தட்டு மக்களைக் குறிவைத்துத் தாக்குகின்றனர்" என பெரும் வருத்தத்துடன் கூறினார்.
அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர் ஒருவர், ஒரு உதாரணத்துடன் ஒரு அரிய கருத்தை முன் வைத்தார்:
"சர்ச்சுக்களில் உள்ள 'பாஸ்டர்' அவர்களின் மத விஷயங்களை (குறிப்பாக அன்பு, ஆதரவு, போன்றவை) எளிமையாகத், திரும்பத் திரும்ப எடுத்து உரைக்கிறார். கேட்பவர் யாராக இருப்பினும், அவர்கள் அவ்விஷயங்களைச் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் வறுமையிலோ, ஆதரவின்றி தவிக்கும் போதோ, 'பாஸ்டரின்' உதவியை வேறு போக்கிடம் இன்றி நாடுகிறார்கள்" என மனிதகுணப் போக்கினை அறிந்து குறிப்பிட்டார்.
மேலும், "இந்து மதத்தில் மேற்குறிப்பிட்ட அன்பு, ஆதரவு போன்ற விஷயங்களுடன், மற்ற சிறந்த விஷயங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் எவ்வளவோ உயர்ந்த விஷயங்கள் இருந்தாலும், அவற்றில் உள்ள வித்தியாசங்களைக் கடந்து ஒருவன் தேர்ச்சி பெற பல ஆண்டுகள் பயிற்சி வேண்டும். இந்த அவசர உலகத்தில், அப்படி தேர்ச்சி பெற ஒரு சராசரி இந்து முனைவதில்லை. அப்படியே முனைந்து தேர்ச்சி பெற்றாலும், கீழ்த் தட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு பொறுப்பை முனைந்து ஏற்பதில்லை" என்று இந்து நடைமுறை வாழ்க்கையில் காணும் குறைப்பாட்டைச் சுட்டிக் காட்டினார்.
(தொடரும்)
- பரமஹம்ஸ தாஸன்
பட்டாம்பூச்சி ஞானபூர்ணம் - பகுதி 2
அதுவரை கூட்டத்தில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த சாமி ஞானபூர்ணம், கூட்டத்தின் இடையிலேயே திடீரென்று எழுந்து, கடுத்த முகத்துடன் வெளியேறினார்.
கூடியிருந்த மற்ற ஆன்றோர்கள் தொடர்ந்து ஆலோசித்தனர். அவர்கள் கலந்து பேசிக்கொண்டதை முத்தாய்ப்பாகக் கல்லூரிப் பேராசிரியர் பின்வருமாறு தொகுத்து வழங்கினார்:
"ஆதரவற்றவருக்கு ஆதரவு கொடுப்பவன் தெய்வமாக மதிக்கப் படுகிறான். அத்துடன் உதவி செய்பவன் தன் உதவியால் ஒருவனைக் காக்கும் போது 'ஈத்துவக்கும் இன்ப'த்தைப் பெறுகிறான். அதனால் தான், மற்ற மத பிரசாரகர்கள், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பண ஆதரவு ஒரு பக்கம் இருந்த போதிலும், அவர்கள் துணிந்து தன்னுயிர்க்கு தீங்கு நேரும் இடங்களில் கூடச் சென்று தன் மதக் கொள்கைகளைப் பரப்பி மதமாற்றம் செய்கிறார்கள்.
மத மாற்றம் என்பது இந்து மத கொள்கைகளுக்கு முரணானது. அதே சமயத்தில், மாற்று மதத்தினர் பிரச்சாரம் எடுபடாமல் இருக்க, இந்துமதத்திற்குள் உள்ள உட்பிரிவுகளை, எப்படி அது 'வேற்றுமையிலும் ஒற்றுமை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இணைக்கின்றதோ, அப்படி நாம் மற்ற மதத்தினையும் நம் உட்பிரிவின் ஒன்றாக அணுக வேண்டும்.
அதற்கேற்ப, இந்துமதத்திலுள்ள 'மத இணக்க' அடிப்படைக் கொள்கைகளைத் தொகுத்து, ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் நம் ஊர்மக்களுக்கு குறிப்பாக கீழ்த்தட்டு மக்களைச் சென்று சேரும் வண்ணம் எடுத்துக்கூற வேண்டும். அப்படி செய்வது தான், அமைதியான முறையில் மதமாற்றத்தைத் தடுக்க ஒரே வழி!"
மேலும், இதைச் செயல்முறைக்குக் கொண்டு வர திறனும், ஆர்வமும் படைத்த குணசாலிகள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இத்துடன் அன்றைய கூட்டம் முடிவுற்றது.
சில நாட்கள் உருண்டோடின. ஒரு நாள், சாமி ஞானபூர்ணம் இன்னொரு கூட்டத்தில் பேசுகையில்,
"'மேரியும், மாரியாத்தாவும் ஒன்றே' என்று இவ்வூரில் சில நபர்கள் மத விஷயம் பற்றி ஒன்றும் தெரியாமல் பைத்தியங்கள் போல் உளறுகிறார்கள்.
அதெப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக முடியும்? நம் மாரியாத்தா கன்னிப்பெண்ணாக சிவ பெருமானை அடைய தவம் புரிந்தவள்; ஆனால் மேரியோ குழந்தை ஏசுவை வயிற்றில் சுமந்தவள், ஜோசப்பை மணம் புரியாமல் கணவனாகக் கொண்டவள்"
என்று, எப்படி அடிப்படை மதத் தீவிரவாதிகள் மற்ற மதத்தினை அதன் சங்கேத உட்கருத்துக்களை அறியாமல், மனித உறவுடன் தொடர்பு செய்துத் தூற்றுவார்களோ அப்படி, கொச்சைப் படுத்தி மேலும் பேசி ஊர்மக்களை திடுக்கிட வைத்தார்.
---
"ஏகம் ஸத், விப்ர பஹுதா வதந்தி" ("சத்யம் ஒன்று; அதை அறிஞர்கள் பலவாறு கூறுவர்") - ரிக் வேதம்
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்"
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை" - திருமூலர்
"அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்" - திருவள்ளுவர்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்
உலக சமத்துவத்தை, அன்பை, ஒருமைப்பாட்டை முதுகுத்தண்டினைப் போல் கொண்ட இந்து மதத்தில் ஞானபூர்ணத்தின் பேச்சு, ஆன்மீக விஷயம் அறிந்தோர் மத்தியில், "இது என்னடா நம் ஊருக்கு வந்த சோதனை!" என்று மிகவும் கவலையை உருவாக்கியது. அவரின் குருவினைப் பற்றி அறிந்தவர்கள், "இவர் உண்மையாகவே அந்த குருவின் சிஷ்யர் தானா?", "இவரின் குருவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விடுவாரோ" என்று சந்தேகமும், அச்சமும் கொண்டனர்.
இந்த கூட்டம் நடந்த சில நாளில், அவ்வூர் மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு பெரும் யோகி அவ்வூருக்கு வருவதாகத் தகவல் கிடைத்தது. கலக்கம் அடைந்த ஊர் மக்கள், அவரிடம் அணுகி இப்பிரச்சனைக்கு தீர்வு நாடலாம் என்ற நம்பிக்கையுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
(தொடரும்)
- பரமஹம்ஸ தாஸன்
பட்டாம்பூச்சி ஞானபூர்ணம் - பகுதி 3
ஊருக்கு வந்த மஹாயோகிக்குத் தக்க உபசாரம் அளித்து, அவரிடம் அவ்வூர்ப் பெரியோர்கள், மதமாற்றப் பிரச்சனை, அதைப் பற்றிய ஆலோசனைக் கூட்டம், ஞானபூர்ணத்தின் அநாகரீகப் பேச்சு ஆகியவை பற்றி நடந்ததைக் கூறி அவரிடம் அறிவுரை வழங்குமாறு வேண்டினர்.
யோகி அவர்கள் கூறியதைக் கிரஹித்துக் கொண்டு, மறுநாள் அவர் ஊர் மக்களிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். மறுநாள் கூட்டத்திற்கு ஊரே திரண்டு வந்தது. இந்து மதத்தினரைத் தவிர இதர மதத்தவர்களும் கலந்து கொண்டனர். நடந்த சம்பவங்களால் ஒருபக்கம் மதக் கலவர பயம் இருந்த போதிலும், இன்னொரு பக்கம் யோகியின் பேரில் உள்ள நம்பிக்கையுடன் அவர்கள் கலந்து கொண்டனர்.
யோகி மஹாராஜ் பேசியதன் சாராம்சம்:
"மதம் என்பது மனிதன் கடவுளை அடையும் வழி. உலகெங்கும் பல்வேறு மகான்கள் கால சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு மதங்களை, அந்தந்த மக்களின் ஆன்ம வளர்ச்சிக்கு எது அவசியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அமைத்துக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு மனிதனின் கடமை, தான் எந்த மதத்தில் பிறந்தோமோ அதை கடைப்பிடித்துக் கொண்டு முன்னேறிச் செல்வது தான். மற்ற மதத்தவரை தன் மதத்திற்கு மாற்ற முயல்வது, இரு சாரரும் தத்தம் பாதையில் பயணிக்க உபயோகிக்க வேண்டிய சக்தியை விரயமடிக்கும் ஒரு விஷமத்தனமான வேலை.
உதாரணமாக, இருதயநோய் மிகுந்துள்ள ஒரு நாட்டில் இருந்து, அங்குள்ள வசதியுள்ள இருதயமாற்று சிகிச்சை மருத்துவர்கள், இன்னொரு நாட்டில் வறுமையில் வாடும், கிட்னி நோய் மிகுந்துள்ள அந் நாட்டிற்குச் சென்று, அவர்களுக்கு சிகிச்சை செய்வது போல. கிட்னி நோயாளிக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை (Heart Transplant) இலவசமாகவே செய்தாலும் கூட, ஒருக்கால் அந்நோயாளி சில நாட்கள், மாதங்கள் சற்று முன்னேற்றம் கண்டாலும், அந்நோயாளிக்கு முன்னிருந்த நோயை விட, பொருந்தாத பகுதியில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக, அதிகமான துன்பத்தைத் தான் விளைவாகத் தரும். மதமாற்றத்தின் தீயவிளைவும் அப்படியே!
எந்த சமுதாயத்திலும் உள்ளது போல், இந்து மத சமுதாயத்திலும் குறைகள் காணப்படுகின்றன. முக்கியமாக, கீழ்ஜாதி-மேல்ஜாதி, தீண்டாமை, வறுமை போன்றவை. இவைகளுக்கு காரணம் மனிதனின் பேராசையே! மத விஷயங்களுக்கான அடிப்படையை சரியாமல் புரிந்து கொள்ளாமல், மதத்திற்கும் இக் குறைகளுக்கும் சம்பந்தம் காண்பது, மதமாற்ற விஷமக் குசும்பர்களின் செயலே!
அதைத் தடுக்க ஒரே வழி, இந்து ஆர்வலர்களைத் தயார் செய்வது தான். அவர்கள் இந்து மதத்தின் முக்கிய நோக்கம், அடிப்படைக் கொள்கைகள், சிறப்புத் தன்மை, உட்பிரிவுகள் போன்றவற்றை கசடறக் கற்க வேண்டும். அத்துடன், இதற்கும் மற்ற மதங்களில் உள்ள குறிப்பான ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன, என்பதையும் அறிய வேண்டும்.
எல்லா உண்மையான மதங்களும் (இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த) அடிப்படையில் ஒன்றே என்று இந்து மதத்தில் தோன்றிய பல பேரரிய மகான்கள் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அவரது சீடர்கள், ஸ்ரீ சுவாமி யுக்தேஷ்வர் கிரி, ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், ரமண மகரிஷி போன்றோர்) கூறியுள்ளனர். அத்துடன், மற்ற மதங்களில் உள்ள சிறப்பம்சங்களை, இந்து மதத்தினுள்ளும், செயற்கையாகத் திணிக்காமல், இயற்கையாக செயல்படுத்தும் விதத்தில் மத இணக்கப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன், மற்ற மத மகான்கள் சொன்ன உபதேசங்களுக்கு, மதமாற்றக் குசும்பர்கள் அவற்றைத் திரித்து அவர்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் வாசகங்களுக்கு, மேற்சொன்ன இந்து மகான்கள் உண்மையான அர்த்தம் கொடுத்து தெளிவு படுத்தியுள்ளார்கள். இவைகளையும் இந்து ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இப்படித் தேர்ச்சி பெற்ற ஆர்வலர்கள், இந்து மதத்தில் உள்ள வறுமையில், சமுதாய நோக்கில் கீழ்த்தட்டில் உள்ள மக்களை அணுகி, அவர்களுக்கு உடல், மனம், உள்ளம் ஆகியவற்றுக்குத் தேவையான ஒருமித்த சேவையை மனதார செய்விக்க வேண்டும். அதற்கு வசதியுடையவர்கள் பொருளுதவி செய்ய வேண்டும். மற்ற மதத்தவரும் இந்த சேவையினால் பயன் பெறலாம், ஆனால் நோக்கம் அவர்களை மத மாற்றம் செய்வது அல்ல. "அவரவர் தத்தம் மத வழக்கங்களின் படி சிறப்பாக செயல்பட்டு மேல் நோக்கிச் செல்வது தான்" என்ற ஒரே குறிக்கோளைக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஒரு மதத்தவர், மற்ற மத சம்பிரதாயங்களை, மத நூல்களில் உள்ள விஷயங்களை, மற்றவர் தெய்வமாகப் போற்றும் மகான்களை கொச்சைப் படுத்தி, ஏளனம் செய்வது மிகவும் அநாகரிகமான, வருந்தத் தக்க செயல். ஒரு மதத்தவர் செய்கின்றனர் என்று, மற்ற மதத்தவர் திருப்பிச் செய்வது உலக அமைதிக்கு, நன்மைக்கு மிகுந்த குந்தகம் பயக்கும் செயல்.
அது நம் எல்லோரையும், எல்லா ஜீவராசிகளையும், எல்லா லோகங்களையும் ஈன்ற, தாயும், தந்தையுமாய் என்றும் நம்மைக் காத்துக் கொண்டிருக்கும், ஒரே கடவுளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய அவமானம். அதனால் விளையும் பாதிப்பு நமக்குத் தான், கடவுளுக்கு அல்ல!
எல்லாம் உடைய, சர்வ வல்லமை படைத்த இறைவன் இறைஞ்சுவது நம் ஒவ்வொருவரின் அன்பிற்காக மட்டுமே! அதை நாம் சுயமாக, விருப்பத்துடன் எந்த கட்டாயமும் இன்றி அவரிடம் செலுத்த வேண்டும் என்பது தான் இப்படைப்பின் நோக்கமே!
ஒன்றாய் இருந்து அரும்பி, பலவாய் பரந்து விரிந்துள்ள அந்த ஆதிபகவனின் என்றும் வற்றாத புதுமையான ஆனந்த உணர்வை, உலகெங்கும் வெவ்வேறு வழிகளில் அடைந்து அனுபவித்த மகான்கள் அருளிய உபதேசங்களை சிரத்தையுடன், விசுவாசத்துடன் அவரவர் வாழ்க்கையில் கடைப்பிடித்து, அம்மகான்களைப் போல், மெய்யான கடவுளுணர்வை எய்துவதே, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் லட்சியம்! அவரவர் பிறந்த மார்க்கத்தில் இந்த லட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்வதே ஒவ்வொருவரின் தலையாய கடமை!
ஓம்! ஆமென்! அமீன்!"
என்று தன் உரையை முடித்துக் கொண்டார்.
யோகியின் பேச்சைக் கேட்ட ஊர் மக்கள், அவர்கள் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த விஷயங்களுக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் வீடு திரும்பினார்கள். யோகியின் 'இருதய ட்ரான்ஸ்பிளாண்ட்' உதாரணம் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்து. மதமாற்ற தீவிளைவுகளை அறிந்து கொள்ள உதவியது. மேற்கொண்டு, அவர் கொடுத்த இந்து மத ஆர்வலர்களின் செயல்திட்டம், அவ்வுதாரணத்தில் 'கிட்னி நோயாளிகளுக்கு' இயற்கை முறையில் நோய் தீர்க்கும் 'கிட்னி மருத்துவர்களை' உருவாக்குவது போல் இருந்தது.
பேச்சில் ஞானபூர்ணத்தைப் பற்றி மறைமுகமாகச் சாடியிருந்த போதிலும், நேரடியாக யோகி ஒன்றும் கூறவில்லையே என்று, முன்னம் அவரிடம் புகார் கூறிய ஊர்ப் பெரியவர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவர்களை மேடையில் இருந்த யோகி கூப்பிட்டு, மறுநாள் அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு வருமாறு கூறினார்.
(தொடரும்)
- பரமஹம்ஸ தாஸன்
பட்டாம்பூச்சி ஞானபூர்ணம் - கடைசிப் பகுதி 4
மறுநாள், யோகி சிரேஷ்டர் அவருடைய தவ வலிமையின் மூலம் ஞான பூர்ணத்தின் பின்னணியை நன்கு உணர்ந்த பின், அங்கு வந்துள்ள ஊர்ப் பெரியோர்களிடம் கூறினார்:
"மனம் எது ஒன்றைத் தொடர்ந்து நினைக்கின்றதோ, அதுவாகவே உருமாறும் சக்தி படைத்தது ("For as he thinketh in his heart, so is he" - Bible, Proverbs 23:7). இதை உளவியல் வல்லுனர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.
இதையொட்டி, யோகமரபில் இப்படி ஒரு ஐதீகம் உள்ளது: அது என்னவென்றால், 'ஒரு வகைப் புழு தான் பட்டாம்பூச்சி ஆக வேண்டும் என்று தொடர்ந்த நினைப்பில் அது உருமாறி பட்டாம்பூச்சி ஆக மாறுகின்றது.' என்பது.
இதைப் பற்றி வேடிக்கையாக, இன்னொரு விஷயம் கூட எனக்குத் தோன்றுவதுண்டு: சென்ற தலைமுறை வரை, தமிழ்நாட்டு கிராமப் புறங்களில், சற்றே கருத்து மாநிறம் கொண்ட பெண்களுக்கு, 'வெள்ளையம்மா' எனவும், கண்ணில் ஓரப் பார்வை உள்ள ஒருவனுக்கு, 'கண்ணாயிரம்' (அழகன் மன்மதனுக்கான பெயர்) எனவும் பெயரிடுவார்கள்.
அதேபோல், 'சுவாமி' என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள அனைவரும் அப் பெயருக்குத் தக்க வண்ணம் நடந்து கொள்வதில்லை.* அப்படி பெயர் சூட்டிக் கொள்வது, அவர்கள் அடையும் இலக்கை நினைவுபடுத்துவதற்காக. நம் ஞான பூர்ணத்தின் விஷயமும் அப்படியே!
அவர் தனிப்பட்ட முறையில் நல்லவர், தனிமனித ஒழுக்கம் உடையவர். அவரிடம் உதவி பெற்று ஊர் மக்கள் பலர் பயன் பெற்றுள்ளனர். ஆனால், அவர் குருவிடம் கற்ற வேதாந்த பாடங்களைத் தவிர, மற்ற மத சாஸ்திர விஷயங்களை முறையாகக் கற்கவில்லை. அதன் விளைவே அன்றைய அநாகரீகமான பேச்சு. அவர் ஏற்கனவே பேசியதைப் பெரிது படுத்தாதீர்கள். அதே சமயம், இனிமேல் அவருக்கு 'சுவாமி' என்று எந்த ஒரு மரியாதையையும் செலுத்தாதீர்கள். குறிப்பாக, எந்த ஒரு மத விஷயம் சம்பந்தமாகவோ உங்கள் பிரதிநிதியாக அவரை அனுப்பி விடாதீர்கள்.
அவர் உங்கள் ஊர்க்காரர்; அவருக்கு வேறு போக்கிடம் இல்லை. ஆதலால், அவரின் வளர்ச்சிக்கு, மரியாதைக்குப் பதிலாக, நீங்கள் பரிவை அவரிடம் காட்டுங்கள்.அதைக் கண்டிப்புடன் காட்டுங்கள்!"
என்று அறிவுரை வழங்கினார்.
ஞான பூர்ணத்தைத் தனியே அழைத்து வரச் சொல்லி, அவரின் அநாகரீக பேச்சைக் கண்டித்து, அவருக்கு ஹிதமாகப், முன்னர்ப் பெரியோர்களிடம் கூறிய யோசனைப்படி, புத்தி சொல்லி நல்வழி காட்டி அனுப்பினார்.
யோகியின் நகர விஜயம் முடிவுற்றது.
...
தவயோகியின் அறிவுரைப்படி, அவ்வூர் மக்கள், கல்லூரிப் பேராசிரியர், மற்ற ஆன்மீக சான்றோர்கள் தலைமையில், பலர் இணைந்து, இந்து ஆர்வலர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு முனைப்புடன் பயிற்சி கொடுத்தனர். ஒரு போர்க்கால நடவடிக்கை போன்று ஆர்வலர்களைத் தயார்ப்படுத்தி, இந்து மக்களுக்கு, குறிப்பாகக் கீழ்தட்டு மக்களுக்கு சென்று சேரும் வண்ணம் தொண்டு செய்தார்கள். வலுவடைந்த உடலை எப்படி விஷக் கிருமிகள் தாக்காதோ, அதே போல், மதமாற்ற விஷமர்களும் அவ்வூர்ப் பக்கம் அறவே தலை காட்டவில்லை.
நம் ஞானபூர்ணமும், ஊர் மக்களின் கண்டிப்புடன் கலந்த ஆதரவால் மெய்ஞ்ஞானம் பெற்று, உண்மையான 'சாமி ஞானபூர்ணமாகப்', 'பட்டாம்பூச்சி'யாக மலர்ந்தார்.
சுபம்!
பிரேமம் லோகத்தில் என்றும் பரவ,
பரமஹம்ஸ தாஸன் (D.l. Sivakumar)
Jai Gurdev! AUM!
https://www.facebook.com/groups/1387605774879544/ (If you like the story, check out our FB group)
பின் குறிப்பு: இக்கதையில் காணும் நிறை யாவும் என் குருவைச் (ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்) சாரும்; ஏதேனும் குறை கண்டால் அது என்னைச் சாரும் - தயை கூர்ந்து தெரியப் படுத்துங்கள்.
---
* - The ideal of selfless service to all mankind, and of renunciation
of personal ties and ambitions, leads the majority of swamis to
engage actively in humanitarian and educational work in India, or
occasionally in foreign lands. Ignoring all prejudices of caste,
creed, class, color, sex, or race, a swami follows the precepts of
human brotherhood. His goal is absolute unity with Spirit. Imbuing
his waking and sleeping consciousness with the thought, "I am He,"
he roams contentedly, in the world but not of it. Thus only may
he justify his title of swami-one who seeks to achieve union with
the SWA or Self. It is needless to add that not all formally titled
swamis are equally successful in reaching their high goal.
--- From the chapter 24:
I BECOME A MONK OF THE SWAMI ORDER
of "Autobiography of a Yogi" by Sri Paramahansa Yogananda. For full book, click here:
http://www.gutenberg.org/ebooks/7452?msg=welcome_stranger
---